வடமதுரை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; மில் தொழிலாளி போக்சோவில் கைது

வடமதுரை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மில் தொழிலாளி மற்றும் உடந்தையாக இருந்த தாய் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-08-29 12:40 GMT
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை இ.பி.காலனி அருகே உள்ள சத்யாநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே நூற்பாலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 45 வயது பெண் வேலை பார்த்து வந்தார். இவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். 
இந்தநிலையில் சிவக்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் சிவக்குமார் அடிக்கடி திண்டுக்கல்லில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்தார். இந்த பெண்ணின் மகள் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது சிவக்குமார் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி வடமதுரையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து மாணவி தனது தாயிடம் கூறினார். அப்போது அவர் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து உறவினர்களிடம் கூறினார். 
இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொல்லை கொடுத்த சிவக்குமாரையும், அதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் தாயையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் செய்திகள்