கால் டாக்சி டிரைவரை தாக்கி கையடக்க கணினியை பறித்த கல்லூரி மாணவர் கைது
சென்னை கோடம்பாக்கம் நம்பியார் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). கால் டாக்சி டிரைவர். இவர் நேற்று அதிகாலை சென்னை முகப்பேர் மேற்கு பஸ் நிறுத்தத்தில் இரண்டு வாலிபர்களை சவாரிக்கு அழைத்துச் சென்றார்.
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பெருமாள் கோவில் அருகே கார் வந்தபோது, காரை நிறுத்துமாறு அவர்கள் செந்தில்குமாரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து காரை நிறுத்திய போது, காரில் இருந்து இறங்கிய இருவரும் செந்தில்குமாரை தாக்கி கையடக்க கணினியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து அறிந்த ரோந்து போலீசார் செந்தில்குமாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கால்டாக்சி நிறுத்தி சோதித்தனர். அந்த காருக்குள் கையடக்க கணினியை பறித்த வாலிபர்கள் இருப்பதை அடையாளம் காட்டியுள்ளார். விசாரணையில் அவர்கள் சென்னை முகப்பேர் மேற்கு செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சரண் (21) என்பதும், மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படிக்கும் மாணவரான சஞ்சு (21) என தெரியவந்தது. பின்னர் இருவரையும் திருமுல்லைவாயல் போலீசார் கைது செய்து நேற்று மாலை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.