விசா காலம் முடிந்து இந்தியாவில் தங்கி இருந்த சூடான் வாலிபர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பிவைப்பு; குடியுரிமை அதிகாரிகள் நடவடிக்கை
விசா காலம் முடிந்து 2 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி இருந்த சூடான் வாலிபரை கண்டுபிடித்து குடியுரிமை அதிகாரிகள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
சூடான் நாட்டுக்காரர்
சூடான் நாட்டை சோ்ந்தவா் முகமது ஹலூம் (வயது 22). இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகள் விசாவில் இந்தியாவிற்கு வந்தாா். ஆனால் விசா காலம் முடிந்து காலவாதியான நிலையில் அவருடைய நாட்டிற்கு திரும்பி செல்லவில்லை.சட்ட விரோதமாக இந்தியாவிலேயே தங்கி இருந்தாா். இந்த நிலையில் முகமது ஹலூம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூா் மாவட்டங்களில் தங்கி இருந்து பின்னலாடை தொழிற்சாலைகளில் தினக்கூலியாக வேலை செய்து வந்ததாக தெரிகிறது.இதற்கிடையே குடியுரிமை அதிகாரிகள் சூடான் நாட்டு குடிமகனான முகமது ஹலூம் சுற்றுலா விசாவில் வந்தவா் 2 ஆண்டுகளாகியும் திரும்பி செல்லவும் இல்லை. அவருடைய விசா நீடிப்பும் செய்யப்படவில்லை என்பதை கண்டுப்பிடித்தனர். இதையடுத்து அவரை தேடத்தொடங்கினா். இது குறித்து தமிழக போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். விசா முடிந்து தலைமறைவாக இருக்கும் முகமது ஹலூம்மை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் திருப்பூா் அருகே அவரை போலீசாா் கண்டுபிடித்து திருச்சியில் உள்ள ஒரு சிறப்பு முகாமில் தங்க வைத்தனா்.
திருப்பி அனுப்பினர்
அவரை இந்தியாவில் இருந்து வெளியேற்றி சூடான் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் மேற்கொண்டனா். இதையடுத்து திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முகமது ஹலூம் பலத்த பாதுகாப்புடன் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டாா்.சென்னையில் இருந்து தோகா செல்லும் கத்தாா் ஏா்லைன்ஸ் விமானத்தில் தோகா வழியாக சூடான் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டாா். இனிமேல் முகமது ஹலூம் இந்தியாவிற்குள் வர அனுமதிக்கப்படமாட்டாா். அவருக்கு இந்திய அரசு இனிமேல் விசா வழங்காது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.வெளிநாட்டவா்கள் சிலா் முறையான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் ஊடுருவி சட்ட விரோதமாக தங்கி இருக்கின்றனா். அவா்களை கண்டுப்பிடித்து நாட்டிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையை இந்திய அரசு எடுத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.