குமரியில் 2 சொகுசு படகுகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
குமரியில் ரூ.8½ கோடியில் வாங்கப்பட்ட 2 சொகுசு படகுகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
நாகர்கோவில்:
குமரியில் ரூ.8½ கோடியில் வாங்கப்பட்ட 2 சொகுசு படகுகள் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
கன்னியாகுமரி சுற்றுலாதலம்
கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கன்னியாகுமரி சுற்றுலா தலம் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.
இந்தநிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து சுற்றுலாதலங்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. எனவே கடந்த சில நாட்களாக கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2 புதிய படகுகள்
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் சென்றுவர வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் சார்பில் படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. அதாவது குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகளில் உள்நாட்டு பயணிகளுக்கு கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.50-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.200-ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த படகுகளில் சாதாரண நாட்களில் அதிகபட்சமாக 4 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், சீசன் காலங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் பயணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாகவும், சுற்றுலா பயணிகளை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் ஏற்றிச் செல்ல வசதியாகவும் மேலும் 2 சொகுசு படகுகள் ரூ.8½ கோடியில் வாங்கப்பட்டது. அதாவது தாமிரபரணி, திருவள்ளுவர் என்ற பெயர்களில் இந்த படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் திருவள்ளுவர் படகு மொத்தம் 150 சொகுசு இருக்கைகளை கொண்டது. இதில் கீழ்தளத்தில் உள்ள 131 இருக்கைகள் குளிர்சாதன வசதி இல்லாதது. மேல்தளத்தில் உள்ள 19 இருக்கைகள் குளிர்சாதன வசதி கொண்டது. தாமிரபரணி படகு 75 சொகுசு இருக்கைகளுடன் கூடியது. இந்த படகு முழுக்க, முழுக்க குளிர்சாதன வசதி கொண்டது.
1½ ஆண்டுகளாக காத்திருக்கிறது
இந்த 2 சொகுசு படகுகளும் கன்னியாகுமரிக்கு வந்து 1½ ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கொரோனா பரவல், சுற்றுலா தலங்களுக்கு தடை ஆகியவற்றின் காரணமாக இந்த படகுகள் இதுவரை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு வராமல் படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டபிறகும் இந்த படகுகள் இயக்கப்படாமல் மற்ற 3 படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு கட்டணமாக வசூலிக்கப்படும் ரூ.50 கட்டணத்தில் இந்த புதிய நவீன சொகுசு படகுகளை இயக்க முடியாது என்றும், அரசு இந்த படகுகளுக்கான சுற்றுலா பயணிகளின் பயண கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்த பிறகு தான் புதிய படகுகளை இயக்க முடியும் என்று காரணமாக சொல்லப்படுகிறது.
காரணம் என்ன?
இதுதொடர்பாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 2 படகுகளும் உயர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சொகுசு படகுகளாகும். எனவே இந்த படகில் சொகுசு இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த படகுகளுக்கான எரிபொருள் செலவு மற்றும் பராமரிப்பு செலவு அதிகம் ஏற்படும். அதனால் தற்போது வசூலிக்கும் கட்டணத்தில் இந்த படகுகளை இயக்கினால் நஷ்டம் தான் ஏற்படும். எனவே புதிய சொகுசு படகுகளுக்கு மட்டும் கட்டணத்தை நிர்ணயம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அரசு புதிய கட்டணத்தின் படியோ அல்லது தற்போதுள்ள பழைய கட்டணத்திலோ படகுகளை இயக்க உத்தரவிட்டால் அதன்படி இயக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.
பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?
சாதாரணமாக படகுகளை சில நாட்கள் இயக்காமல் கடல் நீரில் நிறுத்தியிருந்தால் அதற்காக பராமரிப்பு செலவு பல லட்சம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. ஆனால் புதிய படகுகள் வந்து 1½ ஆண்டுகள் ஆகியும் இதுவரை இந்த படகுகள் காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் வருமானம் இன்றி, பராமரிப்பு மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு 2 புதிய சொகுசு படகுகளையும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது சுற்றுலா பயணிகள், சமூக நல நோக்கர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.