துப்பாக்கி சுடும் போட்டியில் தென்காசி போலீஸ் சூப்பிரண்டு முதலிடம்
வல்லநாட்டில் நடந்த பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும்போட்டியில் தென்காசி மாவட்ட சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முதலிடம் பெற்றார்.
தென்காசி:
நெல்லை சரக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று நடந்தது. போட்டிக்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார்.
போட்டியில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், சூப்பிரண்டுகள் (தூத்துக்குடி) ஜெயக்குமார், (நெல்லை) மணிவண்ணன், (தென்காசி) கிருஷ்ணராஜ், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார், நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் சுரேஷ்குமார், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை பட்டாலியன் சூப்பிரண்டுகள் ஏசுசந்திரபோஸ், கார்த்திகேயன், வள்ளியூர் உதவி சூப்பிரண்டு சமய்சிங் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இன்சாஸ் ரக துப்பாக்கி சுடும் பிரிவுக்கான போட்டியில் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா முதலிடத்தையும், நெல்லை மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் 2-வது இடத்தையும் பிடித்தனர்.
பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும்போட்டியில் தென்காசி மாவட்ட சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முதலிடத்தையும், நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் சுரேஷ்குமார் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் தென்காசி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் முதலிடத்தையும், வள்ளியூர் உதவி சூப்பிரண்டு சமய்சிங் மீனா 3-வது இடத்தையும் பிடித்தனர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு நெல்லை மாநகர கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் பரிசு வழங்கினார்.