போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
நாகர்கோவிலில் நள்ளிரவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நள்ளிரவில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கியதாக சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
லாட்ஜில் தகராறு
நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது 54). வடசேரி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் பார்வதிபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தகராறு நடப்பதாக புகார் வந்தது.
அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரன், பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக சம்பந்தப்பட்ட லாட்ஜிக்கு சென்றனர். அப்போது அங்கு 5 வாலிபர்கள் சேர்ந்து லாட்ஜ் மேலாளரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. எனவே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரன் அங்கு தகராறில் ஈடுபட்டவர்களை அழைத்து கண்டித்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் ஒன்று சேர்ந்து தகாத வார்த்தைகள் பேசி அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரனின் முகத்தில் கையால் குத்தியதாக தெரிகிறது. மேலும், இரும்பு கம்பியால் அவரது தோள்பட்டையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் வாலிபர்கள் தப்பி ஓடினர்.
இருப்பினும் போலீசார் துரிதமாக செயல்பட்டு 2 பேரை மடக்கி பிடித்தனர். மேலும் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதை தொடர்ந்து பிடிபட்ட வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
அப்போது அவர்கள் ஒழுகினசேரியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஆவாஷ் விக்டர் (24), ஓட்டுப்புரை தெருவை சேர்ந்த அரவிந்த் (23) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய 3 பேரும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரிய வந்தது.
மேலும் இதுதொடர்பாக வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரையும் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.