பேட்டையில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவர் கைது
பேட்டையில் 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
பேட்டை:
நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் பேட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேட்டை கருங்காடு ரோடு மயிலப்புரத்தை அடுத்துள்ள கல்லறை தோட்டம் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் சிங்கிகுளம் சுபாஷ்சந்திரபோஸ் தெருவை சேர்ந்த ஐகோர்ட் மகாராஜா (வயது 46) என்பதும், பிரபல ரவுடியும், கஞ்சா வியாபாரியுமான மணியின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். அதன்பேரில் ஏற்கனவே சிறையில் உள்ள பேட்டை மணி, சுந்தர், தினேஷ் சரண்யா ஆகியோரின் கூட்டாளியான ஐகோர்ட் ராஜா, 25 கிலோ கஞ்சாவை பேட்டையில் விற்பனை செய்ய முயன்றபோது கைது செய்யப்பட்டு உள்ளார்.
கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்த 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனை விவகாரத்தில் சிறையில் உள்ள பேட்டை மணி தான் முக்கிய குற்றவாளியாக இருந்து வருகிறார். நெல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.