தஞ்சை அருகே அரிசி ஆலை குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.3 கோடி நெல் மூட்டைகள் பறிமுதல்

தஞ்சை அருகே அரிசி ஆலை குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 30 ஆயிரம் நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-08-28 17:52 GMT
வல்லம்:-

தஞ்சை அருகே அரிசி ஆலை குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.3 கோடி மதிப்புள்ள 30 ஆயிரம் நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

செயல்படாத அரிசி ஆலை

தஞ்சை அருகே வல்லம்-ஒரத்தநாடு சாலையில் உள்ள ஏழுபட்டியில் மிகவும் பழமையான அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து வருகிறது. 
அங்கு உள்ள ராட்சத நெல் அரைக்கும் எந்திரங்களும் பயன்பாட்டில் இல்லை. பல ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ள இந்த ஆலையின் பின்புறம் 5 பெரிய குடோன்கள் அமைந்துள்ளன. 

ரகசிய தகவல்

இந்த குடோன்களில் நெல் பதுக்கி வைத்து கடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரிக்கு நேற்று மதியம் ரகசிய தகவல் கிடைத்தது.   அதன்பேரில் உமாமகேஸ்வரி, தரக்கட்டுப்பாடு மேலாளர் லலிதாமணி, கொள்முதல் மற்றும் அனுப்புதல் பிரிவு துணை மேலாளர் முத்தையா, கண்காணிப்பாளர் செந்தில்வேல் மற்றும் போலீசாருடன் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.

ரூ.3 கோடி நெல் பறிமுதல்

அப்போது அங்கு உள்ள ஒவ்வொரு குடோனிலும் மலைபோல் நெல் குவித்து வைக்கப்பட்டு இருந்ததையும், ஒரு குடோனில் 20 ஆயிரம் நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததையும், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான சாக்குகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். குடோனுக்கு வெளியிலும் பெரிய தார்ப்பாய் போட்டு நெல் மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 30 ஆயிரம் நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் அரிசி ஆலை உரிமையாளரிடம் மேற்கொண்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் குடோன்களை வாடகைக்கு விட்டதாக அவர் தெரிவித்தார்.

பதுக்கி வைத்தவர்கள் யார்?

நெல்லை மூட்டைகளாகவும், குவியலாகவும் குடோன்களில் பதுக்கி வைத்தவர்கள் யார்? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
குடோன்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நெல், நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் மூலம் தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அனைத்து நெல்லையும் அப்புறப்படுத்த 2 நாட்களாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

பரபரப்பு

பயன்பாட்டில் இல்லாத அரிசி ஆலையின் குடோன்களில் ரூ.3 கோடி மதிப்புள்ள நெல் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்