ஆலங்காயம் அருகே; ஒற்றை யானை வயல்களுக்குள் புகுந்து அட்டகாசம்

ஆலங்காயம் அருகே ஒற்றை யானை வயல்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன.

Update: 2021-08-28 17:43 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை யானை நடமாடி வருகிறது. 

இந்த யானை வயல்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு மொசக்குட்டை பகுதிக்கு வந்த ஒற்றையானை அங்கு சிவசக்தி என்பவருக்கு சொந்தமான வயலில் புகுந்து நெல், கேழ்வரகு, வாழை போன்ற பயிர்களை மிதித்து நாசம் செய்தது.

 மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் கொண்டு செல்வதற்காக புதைக்கப்பட்டுள்ள குழாய்களை மிதித்ததில் அவை நாசம் அடைந்தன.

இதுகுறித்து ஆலங்காயம் வனத்துறைக்கு தகவல் அளித்தும் வனத்துறையினர் யானையை விரட்ட வராததால், கிராம மக்களே விடிய விடிய போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். 

அந்த யானை ஆலங்காயம், காவலூர், ஜமுனாமரத்தூர், சத்திரம், மலைரெட்டியூர் பகுதிகளில் சுற்றி வருகிறது. 

எனவே வனத்துறையினர் குழு அமைத்து ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், வனப்பகுதியை ஒட்டி ராட்சத பள்ளங்களை தோண்டி விவசாய நிலங்களுக்குள் யானை வராமல் தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்