மேம்பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

மதுரை-நத்தம் பறக்கும் சாலைக்கு கட்டப்படும் மேம்பாலத்துக்கான பணிகளின் போது, இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

Update: 2021-08-28 16:44 GMT
மதுரை,

மதுரை-நத்தம் பறக்கும் சாலைக்கு கட்டப்படும் மேம்பாலத்துக்கான பணிகளின் போது, இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பலியானார்.

2-வது நீளமான மேம்பாலம்

மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் தமிழகத்தின் முதல் திட்டமாக மதுரை-நத்தம் இடையே ரூ.980 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கியது.
இதன் மொத்த தூரம் 44.3 கிலோ மீட்டர் ஆகும். அதில் மதுரையில் இருந்து ஊமச்சிக்குளம், செட்டிக்குளம் வரை உள்ள 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பறக்கும் சாலை மேம்பாலமும், செட்டிக்குளத்தில் இருந்து நத்தம் வரை உள்ள 33.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையும் அமைக்கப்படுகிறது.
7.3 கிலோ மீட்டர் தூரத்தில் உருவாகும் இந்த பறக்கும் சாலை மேம்பாலம், தமிழகத்தின் 2-வது மிக நீளமான மேம்பாலமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்திற்காக மொத்தம் 188 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட. 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன.
இந்த உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்து நகர் பகுதியில் கீழே இறங்குவதற்காக பல்வேறு இடங்களில் இணைப்பு பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி நாகனாகுளத்தில் இருந்து பாலத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் தனித்தனியே இணைப்பு பாலம், உயர்மட்ட மேம்பாலத்தின் இருபுறமும் கட்டப்பட்டு வருகிறது.

பாலம் உடைந்து விழுந்தது

அதில் இணைப்பு பாலத்தின் நீளம் சுமார் 800 அடியாகும். 114 அடிக்கு ஒரு தூண் என்ற அடிப்படையில் 7 தூண்கள் அமைக்கப்பட்டு அந்த பணியும் இறுதி கட்டத்தில் உள்ளது. அதில் 4 மற்றும் 5-வது தூண்களை இணைக்கும் பாலத்தின் மட்டத்தை சரி செய்யும் பணிகள் நேற்று நடந்தன.
 இதற்காக ஹைட்ராலிக் ஜாக்கி எந்திரம் மூலம் பாலத்தின் ஒரு பகுதி தூக்கி நிலை நிறுத்தப்பட்டு இருந்தது. 4-வது தூணில் நின்று 2 ெதாழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஹைட்ராலிக் ஜாக்கியில் இருந்து இணைக்கப்படும் பிரஷர் குழாய் திடீரென்று அறுந்து கீழே விழுந்தது. உடனே இணைப்பு துண்டிக்கப்பட்டு ஜாக்கி கீழே விழுந்தது. அதனால் பாலமும் அடுத்தடுத்த வினாடிகளில் பலத்த சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்தது. அப்போது இணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 ெதாழிலாளர்களும் மேலே இருந்து கீழே விழுந்தனர். அதில் சுராஜ் குமார் என்ற வாலிபர் காயமின்றி தப்பினார். ஆனால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் (வயது27) என்பவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.
பரிதாப சாவு
இந்த பாலம் விழுந்த சத்தம் அப்பகுதியில் சில கிலோ மீட்டர் தூரம் வரை எதிரொலித்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர். மேலும் உடனடியாக இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆகாஷ் சிங்கினை மீட்டு மதுரை ராஜாஜி பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இடிந்து விழுந்த பாலத்தின் கீழ் பகுதியில் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வேறு யாரும் இல்லை. போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர். பேரிடர் மீட்பு படையினரும் வந்து ஆய்வு செய்தனர்.

அமைச்சர்

இதே போல் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி. வெங்கடேசன், கலெக்டர் அனிஷ் சேகர், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பின் கலெக்டர் அனிஷ் சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் ஆகாஷ்சிங் என்பவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணையை தொடங்கி உள்ளோம். விசாரணை முடிவடையும் வரை இந்த பாலப்பணிகளை நிறுத்தி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளோம். விபத்து நடந்த இணைப்பு பாலத்தின் கீழ் பெரிய அளவில் போக்குவரத்து எதுவும் கிடையாது. இந்த விபத்திற்கான காரணம் கண்டறிந்தவுடன் எதிர்காலத்தில் இது போன்று நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-----------------------

மேலும் செய்திகள்