பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.
சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்று வட்டார பகுதிகள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் சிகிச்சைக்கு வருகின்றனர். இதற்கிடையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஆஸ்பத்திரிக்கு பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைக்கும் பலரும் வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சேகரமாகும் இதர கழிவுகளுடன் மருத்துவ கழிவுகளையும் மொத்தமாக கொட்டி வைத்து உள்ளனர். ஆஸ்பத்திரி பிணவறை பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம், கையுறை போன்றவைகளும் குப்பைகளும் கொட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மருத்துவ கழிவுகள்
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதை தவிர கொரோனா சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக மருத்துவ கழிவுகளை 2 நாட்களுக்கு ஒரு முறையும், மற்ற கழிவுகளை நகராட்சி மூலம் தினமும் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த ஒராண்டுகளாக ஆஸ்பத்திரியில் குப்பைகளை முறையாக அகற்றுவதில்லை. சாப்பாட்டு கழிவுகளுடன், மருந்து பாட்டில், பயன்படுத்திய ஊசி போன்ற மருத்துவ கழிவுகளை போட்டு குவித்து வைத்து உள்ளனர். மருத்துவ கழிவுகள், கொரோனா கழிவுகளை தனியாக வைத்து அகற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் கொரோனா வார்டில் பயன்படுத்தப்படும் முககவசம், கையுறை போன்றகளையும் குப்பைகளுடன் போடப்பட்டு உள்ளது. கழிவுகளால் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், மருத்துவ கழிவுகள் தனியாக வைக்கப்பட்டு அகற்றப்படுகிறது. சாப்பாடு உள்ளிட்ட கழிவுகள் மட்டும் பிணவறை பகுதியில் கொட்டப்பட்டு நகராட்சி மூலம் அகற்றப்படுகிறது. மருத்துவ கழிவுகளை, இதர கழிவுகளுடன் கொட்ட கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.