விழுப்புரத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நகை- பணம் திருடிய வேன் டிரைவர் கைது

விழுப்புரத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் நகை- பணத்தை திருடிய வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-08-28 16:22 GMT
விழுப்புரம், 

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திலீப்குமார் (வயது 40). இவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி இவர் தனது குடும்பத்தினருடன் பண்ருட்டியில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொள்ள ரெயிலில் பயணம் செய்தார்.

அங்கு நிச்சயதார்த்த விழாவை முடித்துவிட்டு பண்ருட்டியில் இருந்து ஒரு வேன் மூலம் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு புறப்பட்டனர். விழுப்புரம் வந்ததும் ரெயில் வருவதற்கு ஒரு மணி நேரம் இருந்ததால் விழுப்புரம் வி.மருதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். அப்பகுதியில் வேன் நின்றதும் திலீப்குமாரின் குடும்பத்தினர் தங்கள் உடைமைகளை வேனிலேயே வைத்துவிட்டு அவர்கள் மட்டும் கீழே இறங்கி உறவினர் வீட்டிற்கு சென்றனர்.

நகை- பணம் திருட்டு

பின்னர் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வேனில் விழுப்புரம் ரெயில் நிலையம் வந்து சென்னைக்கு செல்லும் ரெயிலில் புறப்பட்டனர். சென்னையில் இறங்கி வீட்டிற்கு சென்று பார்த்தபோது திலீப்குமாரின் பையில் இருந்த ஒரு பவுன் எடையுள்ள கம்மல், ஒரு பவுன் மோதிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவை காணாமல் போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து திலீப்குமார், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது நகையையும், பணத்தையும் வேன் டிரைவர்தான் திருடிச்சென்றிருக்கலாம் என்றும் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

வேன் டிரைவர் கைது

அதன்பேரில் போலீசார், பண்ருட்டிக்கு சென்று விசாரணை நடத்தியதில் அந்த வேன் டிரைவர் விழுப்புரம் வி.மருதூர் துரைசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த அப்துல்ரசாக் (47) என்பது தெரிந்தது. அவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்ததில் திலீப்குமாரின் குடும்பத்தினர், மருதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் அவரது பையை திறந்து அதிலிருந்த நகை, பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அப்துல்ரசாக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்