லாரிகள் ஏற்றிச்செல்லும் கழிவுநீரை நீர்நிலைகளில் விட்டால் கடும் நடவடிக்கை; திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டும், சுகாதாரத்தை காக்கும் பொருட்டும், கழிவுநீரை நீர்நிலைகள் மற்றும் சாலைகளில் விடுவதை தடுத்து அதனை முறையாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து முறையாக வெளியேற்றும் பொருட்டும் அனைத்து லாரி உரிமையாளர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், கழிவு நீர் கொண்டு செல்லும் லாரிகள் கழிவுநீரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமழிசை பேரூராட்சி மற்றும் ஆவடி மாநகராட்சியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வெளியேற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் கழிவு நீரை ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலோ, சாலைகளிலோ வெளியேற்றக்கூடாது. அவ்வாறு விதிமுறைகளை மீறி வெளியேற்றினால் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விதிகளை மீறிய வாகனங்கள் கைப்பற்றப்பட்டு இந்திய தண்டனை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் விதியை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவு 134 (1)-ன்படி மற்றும் தமிழ்நாடு நகராட்சி சட்டம் பிரிவு 313 ன் படியும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கண்ட விதிமீறல்கள் ஏற்படின் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட உதவி மையம் 18005997626 மற்றும் வாட்ஸ்அப் எண் 9840327626 போன்றவற்றில் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.