அதிக உடல் வெப்ப நிலை உள்ளவர்களை நட்சத்திர விடுதி மது பார்கள், நீச்சல் குளங்களில் அனுமதிக்க கூடாது; அதிகாரிகள் உத்தரவு

கொரோனா தொற்று 3-வது அலையை தடுக்கும் வகையில் அதிக உடல் வெப்ப நிலை உள்ளவர்களை நட்சத்திர விடுதி மது பார்கள், நீச்சல் குளங்களில் அனுமதிக்க கூடாது என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Update: 2021-08-28 11:03 GMT
நட்சத்திர ஓட்டல்கள்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கோவளம், முட்டுக்காடு, கேளம்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை பண்ணை வீடுகள், நட்சத்திர விடுதிகள் போன்றவை பல மாதங்களுக்கு பிறகு தற்போது தமிழக அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் சுற்றுலா வரும் பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன. இநத நிலையில் கொரோனா தொற்று 3-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில, அங்கு தங்க வரும் பயணிகள் மூலம் கொரோனா தொற்று ஒருவருக்கொருவர் பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திர ஓட்டல், தங்கும் விடுதிகள் போன்றவறறின் நிர்வாக இயக்குனர்கள், மேலாளர்களை அழைத்து அவர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வலியுறுத்துவதற்காக மாமல்லபுரம் போலீஸ் துறை, பேரூராட்சி துறை, உணவுத்துறை சார்பில் அந்தந்த துறை அதிகாரிகளின் முன்னிலையில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நடத்திர ஓட்டல் ஒன்றில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா விதிமுறைகள்
இந்த கூட்டத்தில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் தங்க வரும் பயணிகளிடம் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற கண்டிப்பாக வலியுறுத்த வேண்டும். நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்களில் உள்ள நீரை அடிக்கடி மாற்ற வேண்டும். ஒரே நேரத்தில் அதிகமானோரை நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்க கூடாது. உடல் வெப்ப நிலை அதிகமாக உள்ளோரை நீச்சல் குளங்களில் குளிக்கவும், மது பார்களில் மது குடிக்கவும் அனுமதிக்க கூடாது. நடத்திர ஓட்டல்களின் வரவேற்பறையில் கண்டிப்பாக அங்கு வரும் பயணிகள் தங்கள் கைகளை சுத்தம் செய்ய பாட்டில்களில் அடைக்கப்பட்ட கிருமி நாசினி வைக்க வேண்டும். மது பார்களில் மது குடிக்க வரக்கூடியவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர ஓட்டல் நிர்வாகத்தினர் வலியுறுத்த வேண்டும். முக கவசம் அணிந்து வராதவர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. முன்னதாக நட்சத்திர ஓட்டல்களில் பல்வேறு இடங்களில் இருந்து தங்க வரும் பயணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா? என ஆய்வு செய்து அறைகள் வழங்க வேண்டும்.

சமையல் கூடங்களில் கிருமி நாசினி
அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஓட்டல்கள் மற்றும் பண்ணை வீடுகளின் சமையல் கூடங்களில் அடிக்கடி கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காத நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் துறை, பேரூராட்சி மற்றும் வருவாய் துறை, உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்