வாழப்பாடி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 10,850 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் -2 பேர் கைது

வாழப்பாடி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரத்து 850 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-27 23:10 GMT
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 10 ஆயிரத்து 850 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
10,850 லிட்டர் எரிசாராயம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டி பகுதியில் குடோனில் எரிசாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சேலம் மாவட்ட மத்திய புலனாய்வு குழு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையிலான போலீசார் அங்கு சென்று குடோனில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தலா 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 310 கேன்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த கேன்களில் இருந்த 10 ஆயிரத்து 850 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். 
2 பேர் கைது
எரிசாராயத்தை பதுக்கி வைத்திருந்த வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்த தமிழரசு (வயது 41), கன்னியாகுமரி மாவட்டம் விளவன்கோடு பகுதியை சேர்ந்த கனகராஜ் (49) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் வாழப்பாடி பகுதியில் குடோனில் வைக்கப்பட்டு கேரளா மற்றும் தமிழகம் முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் மத்திய புலனாய்வு குழு போலீசார், சேலம் இரும்பாலை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, எரிசாராயம் கடத்தல் மற்றும் விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்