ஈரோட்டில் மக்கள் நாடாளுமன்றம் கூட்டம் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெற தீர்மானம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஈரோட்டில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-08-27 21:46 GMT
ஈரோடு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஈரோட்டில் நடந்த மக்கள் நாடாளுமன்றம் கூட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண் சட்டங்கள்
மத்திய பா.ஜனதா அரசு வேளாண்மை துறைக்கான 3 சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. விவசாய விளைபொருட்களுக்கான வணிக ஊக்குவிப்பு மற்றும் வசதி அளித்தல் சட்டம், விவசாயிகள் (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி செய்தல் மற்றும் வேளாண் சேவைகளுக்கான ஒப்பந்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டம் ஆகிய 3 சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானவை என்று நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த 3 சட்டங்களும் உணவு பாதுகாப்பை சீரழித்து விடும், முழுக்க முழுக்க தனியார் பெரு முதலாளிகளுக்கு சாதகமானவை. எனவே இந்த சட்டங்களை கருப்பு சட்டங்களாக அறிவித்து விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். புதுடெல்லியில் வட்சக்கணக்கான விவசாயிகள் திரண்டு சுமார் 300 நாட்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த போராட்ட களத்தில் இதுவரை 600 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இந்த சட்டங்கள் தொடர்பாக நடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. ஆனால் மத்திய பா.ஜனதா அரசு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவில்லை.
மக்கள் நாடாளுமன்றம்
எனவே நாடு முழுவதும் பொதுமக்களிடம் விவசாயிகள் விரோத சட்டங்களை எடுத்துக்கூறும் வகையிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஊர்கள் தோறும் மக்கள் நாடாளுமன்றம் என்ற கூட்டத்தை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று ஈரோடு மாணிக்கம்பாளையம் பாரதி அரங்கில் மக்கள் நாடாளுமன்றம் கூட்டம் நடந்தது.
கூட்டத்தை முன்னிட்டு பெரிய சேமூர் பகுதி தி.மு.க. செயலாளர் வி.செல்வராஜ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மக்கள் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மூத்த உறுப்பினர் மகாலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் புதுடெல்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிர்நீத்த 600 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தீர்மானம்
மக்கள் நாடாளுமன்ற வேளாண்மைத்துறை மந்திரியாக கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகி த.ஸ்டாலின் குணசேகரன் நியமிக்கப்பட்டார். அவர், விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். அவர் 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஆதரித்து எஸ்.டி.பிரபாகரன், செல்வராஜ், டி.ஏ.செல்வம், மணிராஜ், ரமணி, சோமசுந்தரம், சி.சுந்தரம், விஜயபாஸ்கர், திருச்செல்வம், நந்தகுமார் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கண்டன தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
-----------------------

மேலும் செய்திகள்