அம்மன் கோவிலில் உண்டியல், பூஜை பொருட்கள் கொள்ளை

நாகர்கோவிலில் உள்ள அம்மன் கோவிலில் உண்டியல் மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-08-27 20:50 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள அம்மன் கோவிலில் உண்டியல் மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இசக்கியம்மன் கோவில்
நாகர்கோவில் தொல்லவிளை ஓடைக்கரை பகுதியில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்த பின்பு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
பின்னர் நேற்று காலையில் கோவிலுக்கு வந்தபோது இரும்பு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூசாரி கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியல் மாயமாகி இருந்தது. 
மேலும், கோவிலில் இருந்த குத்துவிளக்குகள், வெண்கலமணிகள் மற்றும் தொங்கு விளக்கு போன்ற பூஜை பொருட்களையும் காணவில்லை.
2 கொள்ளையர்கள் கைவரிசை
இதுகுறித்து ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
மேலும், கோவில் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், இரவில் மர்மநபர்கள் 2 பேர் கோவிலின் இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், பின்னர் வெளியே வரும்போது அவர்கள் வைத்திருந்த சாக்கு பையில் பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் இருந்ததும் பதிவாகி இருந்தது. 
மேலும் அந்த 2 கொள்ளையர்களின் முகம் ஓரளவு தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்