சொத்து தகராறில் விவசாயி கடப்பாரையால் அடித்து கொலை

சொத்து தகராறில் விவசாயி கடப்பாரையால் அடித்து கொலை செய்யப்பட்டார்

Update: 2021-08-27 20:48 GMT
காரையூர்
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள கண்டெடுத்தான்பட்டி இடையன்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா மகன் நடேசன் (வயது 50). விவசாயி. சின்னையாவின் அண்ணன் முத்தாண்டி. இவர், தனது மனைவி அடக்கியுடன் இடையன்பாறை கிராமத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை. முத்தாண்டி ஏற்கனவே இறந்து விட்டார். நடேசன், தனது பெரியம்மாவான அடக்கிக்கு உதவிகள் செய்து வந்துள்ளார்.  இந்தநிலையில் அடக்கி வசித்து வந்த வீட்டின் அருகே நடேசன் ஆட்டுக் தகர கொட்டகை அமைத்துள்ளார். இதனையறிந்த அடக்கியின் தங்கை கொன்னையம்பட்டியை சேர்ந்த பாப்பாத்தியின் மகன்கள் முருகன்(28), சுப்பிரமணியன் (27) ஆகியோர் இடையான்பாறைக்கு வந்து பெரியம்மா அடக்கியின் சொத்துகள் எங்களுக்கு தான் என்று அந்த தகர கொட்டகையை பிரித்து எரிந்துள்ளனர்.
ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவர்களை நடேசன் தட்டிக் கேட்டார். அப்போது கையில் வைத்திருந்த கடப்பாரையால் நடேசனை இருவரும் சேர்ந்து தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலே இறந்தார்.
இதுகுறித்து நடேசனின் மனைவி பஞ்சவர்ணம் காரையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து நடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும், நடேசனை கொலை செய்ததாக சகோதரர்கள் முருகன், சுப்பிரமணியன் மற்றும் சுந்தரம் ஆகிய 3 பேரை காரையூர் போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்