கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 4 மாணவர்களுக்கு தொடர்பா?
கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 4 மாணவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மைசூரு: கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 4 மாணவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி கற்பழிப்பு
மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாதிரிபுரா பகுதியில், கடந்த 24-ந்தேதி காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனும் பயங்கரமாக தாக்கப்பட்டார். இந்த கூட்டு பலாத்கார சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி. பிரதாப் ரெட்டி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாமுண்டி மலை அடிவாரத்தில் மதுபானம் அருந்திய மர்மநபர்களே இந்த கற்பழிப்பு சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
4 மாணவர்களுக்கு தொடர்பா?
இந்த நிலையில், கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் போலீசாருக்கு முக்கிய துப்பு கிடைத்துள்ளது. அதாவது, மைசூரு நகரில் செயல்பட்டு வரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் 4 மாணவர்கள் இந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த மாணவர்கள், கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்ததாகவும், சம்பவம் நடந்த மறுநாள் 4 பேரும் மாயமாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த மறுநாள் கல்லூரியில் நடந்த தேர்விலும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மாயமானவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும், மற்ற 3 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கற்பழிப்பு சம்பவம் நடந்த மறுநாள் தேர்வு இருந்தும், அதில் கலந்துகொள்ளாமல் 4 பேரும் தலைமறைவானது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அந்த மாணவர்களின் விவரங்களை போலீசார் கல்லூரியில் இருந்து சேகரித்து உள்ளனர். இதையடுத்து அவர்களை தேடி கண்டுப்பிடிக்க போலீஸ் குழுவினர் கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் விரைந்துள்ளனர்.
காதலன் வாக்குமூலம்
இந்த நிலையில், கற்பழிப்பு சம்பவம் நடந்த தினத்தில் கல்லூரி மாணவியுடன் சென்ற அவருடைய காதலனை மர்மநபர்கள் பயங்கரமாக தாக்கினார்கள். மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரிடம் நேற்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், போலீசாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 24-ந்தேதி நானும், கல்லூரி மாணவியும் சாமுண்டி மலை அடிவாரத்துக்கு சென்றோம். அங்குள்ள ஒரு பாறை மீது அமர்ந்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல், எங்களை சுற்றி வளைத்து கிண்டல் செய்தனர். இதனை தட்டிக்கேட்ட எண்ணை கல்லால் தலையில் தாக்கினர். இதனால் நான் சுயநினைவை இழந்து மயங்கினேன். பின்னர் நினைவு திரும்பி எழுந்தபோது காதலி அங்கு இல்லை. 4 பேர் மட்டும் என்னை சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் என் காதலி எங்கே என்று கேட்டேன்.
ரூ.4 லட்சம் கேட்டனர்
அப்போது அவர்கள் 4 பேரும் உனது வீட்டுக்கு போன் செய்து ரூ.4 லட்சம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டனர். அவர்களிடம் காதலியை முதலில் காட்டுங்கள் என்று கூறினேன். இதையடுத்து அவர்கள், காதலியை என் முன் கொண்டு வந்தனர். அவருடைய உடல் முழுவதும் நக கீறல்கள் இருந்தன. அவர் அழுது கொண்டிருந்தார். அப்போது அவருடைய நிலையை பார்க்கும்போதே அவர் கற்பழிக்கப்பட்டதை புரிந்து கொண்டேன். அந்த சமயத்தில் யாரோ அந்த வழியாக வந்துள்ளனர். இதனால் மர்மநபர்கள் எங்களை விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பின்னர் அந்த வழியாக வந்த பொதுமக்கள் உதவியுடன் நாங்கள் இருவரும் ஆஸ்பத்திரியில் வந்து சேர்ந்தோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாததால் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் தொடர்ந்து சிகிச்சையில் தான் உள்ளார் என்றும் தெரிவித்தனர்.