கற்பழிப்பு சம்பவம்; கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் விசாரணை
மைசூருவில் மாணவி கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் விசாரணை நடைபெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: மைசூருவில் மாணவி கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. தலைமையில் விசாரணை நடைபெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
டி.ஜி.பி. தலைமையில் விசாரணை
மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை விரைந்து முடித்து, என்னிடமே நேரடியாக அறிக்கையை வழங்கும்படியும் தெரிவித்துள்ளேன்.
கற்பழிப்பு சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் வழக்கு சம்பந்தமாக வேறு எதுவும் பேச விரும்பவில்லை. அதுபற்றிய எந்த தகவலையும் பகிரங்கமாக தெரிவிக்க இயலாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
தீா்வு காணப்படும்
இதுபற்றி போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "மைசூரு மாணவி கூட்டாக கற்பழிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த வழக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது, " என்றார்.