பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்த குடகு என்ஜினீயரிங் மாணவர்

பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை குடகு என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடித்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிளை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-08-27 20:39 GMT
குடகு: பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை குடகு என்ஜினீயரிங் மாணவர் கண்டுபிடித்துள்ளார். அந்த மோட்டார் சைக்கிளை 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

என்ஜினீயரிங் மாணவர்

குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ். இவர் அந்தப்பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் எதுவும் செயல்படவில்லை. இதனால் கிரீஷ் வீட்டில் இருந்து வந்தார். மேலும் ஆன்லைன் வகுப்பிலும் அவர் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், வீட்டிலேயே ஒன்றும் செய்யாமல் இருப்பது அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. 

இதனால், பேட்டரியில் இயங்கும் வகையில் மோட்டார் சைக்கிளை கண்டுப்பிடிக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் பழைய இரும்பு சாமான்கள் கடைக்கு சென்று மோட்டார் சைக்கிள்களின் உதிரிபாகங்களை வாங்கி வந்து மோட்டார் சைக்கிளை தயார் செய்யும் பணிகளை தொடங்கினார். 

6 மணி நேரம் இயங்கும்

இதையடுத்து உதிரிபாகங்களை ஒன்றிணைத்து மோட்டார் சைக்கிளை உருவாக்கிய அவர், அதில் பேட்டரியையும் இணைத்தார். 750 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரியை அவர் மோட்டார் சைக்கிளுடன் இணைத்து சோதனை செய்தார். இந்த சோதனையில் அவருக்கு வெற்றி கிடைத்தது. மிகவும் குறைந்த செலவில், பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளை அவர் கண்டுபிடித்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் இணைக்கப்பட்டுள்ள பேட்டரியை 10 நிமிடம் சார்ஜ் செய்தால், அந்த மோட்டார் சைக்கிள் 6 மணி நேரம் இயங்கும். இந்த மோட்டார் சைக்கிள் தயாரிக்க அவருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகி உள்ளது. இதுகுறித்து கிரீஷ் கூறுகையில், எலெக்ட்ரிக் பொருட்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. இந்த ஆர்வத்தால் தான், பேட்டரியால் இயங்கும் மோட்டார் சைக்கிளை கண்டுப்பிடிக்க முடிந்தது என்றார்.

மேலும் செய்திகள்