குதிரை சிலையில் தூக்கில் தொங்கிய முதியவரால் பரபரப்பு

கரூர் அருகே கோவில் வளாகத்தில் உள்ள குதிரை சிலையில் தூக்கில் தொங்கிய முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-27 20:12 GMT
கரூர்,
கருப்பண்ணசுவாமி கோவில்
கரூர் அருகே புலியூர் முடக்கு சாலை பகுதியில் கருப்பண்ணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள குதிரை சிலையின் கடிவாள பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதுகுறித்து புலியூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அடித்துக்கொலையா?
பின்னர் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தூக்கில் தொங்கிய முதியவர் யார்?, அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. 
மேலும் அவரை யாரேனும் அடித்து கொலை செய்துவிட்டு இங்கு தூக்கு மாட்டிவிட்டு சென்றனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குதிரை சிலையில் தூக்கில் தொங்கிய முதியவரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்