ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மது பாட்டில்கள், சாராயம், குட்கா போன்றவை விற்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். பொன்னேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஒரு மளிகைக் கடைக்கு வந்தவர் போலீசாரை கண்டதும் கையில் வைத்திருந்த பையை மறைத்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூர் ஏரி பகுதியை சேர்ந்த சக்கரபாணி என்பவரின் மகன் திருப்பதி (வயது 30) என்பதும், இவர் கடைகளுக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்வதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 300 ஹான்ஸ் பாக்கெட், 200 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.