நல்லதண்ணீர் உள்ள இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல்

பேரணாம்பட்டு அருகே நல்ல தண்ணீர் உள்ள இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-27 17:35 GMT
பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே நல்ல தண்ணீர் உள்ள இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆழ்துளை கிணறு

பேரணாம்பட்டை அடுத்த வளத்தூர் ஊராட்சியில் உள்ள பெரியார் நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்திட ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று பெரியார் நகரிலுள்ள மலையடிவார பகுதியில் அதற்கான பணி தொடங்கப்பட்டது.

அபர்போது கிராம மக்கள் சென்று இங்கு ஆழ்துளை கிணறு அமைத்தால் உப்பு தண்ணீர்தான் கிடைக்கும் என கூறி, ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணியை நிறுத்தினர். மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற நல்ல தண்ணீர் கிடைக்கும் இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சாலை மறியல்

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மேல்பட்டி - குடியாத்தம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த குடியாத்தம் ஒன்றிய ஆணையாளர் மணிமொழி, மேல்பட்டி போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 
கிராம மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அவர்கள் தெரிவிக்கும் இடத்தில் நல்ல தண்ணீர் உள்ள இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்