பொள்ளாச்சி ரெயில் நிலையம் முக்கியத்துவத்தை இழந்தது

பொள்ளாச்சி ரெயில் நிலையம் முக்கியத்துவத்தை இழந்தது

Update: 2021-08-27 15:56 GMT
பொள்ளாச்சி

பாலக்காடு கோட்டத்துடன் இணைக்கப்பட்டதால் பொள்ளாச்சி ரெயில் நிலையம் முக்கியத்துவத்தை இழந்து நிற்கிறது.

ரெயில் நிலையம்

பொள்ளாச்சி ரெயில் நிலையம் நூற்றாண்டுகள் பழமையானது. முதல் முறையாக பொள்ளாச்சி-போத்தனூர் இடையே கடந்த 1915-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி ரெயில் சேவை தொடங்கப்பட்டது. 

அதன்பிறகு 1928-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந்தேதி திண்டுக்கல் வரை ரெயில் பாதை நீட்டிக்கப்பட்டது.  

1932-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி பாலக்காடு வரை ரெயில் பாதை இணைக்கப்பட்டது. பொள் ளாச்சி ரெயில் நிலையம் மதுரை கோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அப்போது பொள்ளாச்சி ரெயில் நிலையம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. 

இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது, பொள்ளாச்சியை மதுரை யில் இருந்து பிரித்து பாலக்காடு கோட்டத்துடன் இணைத்தனர். 

இதையடுத்து மீட்டர் கேஜ் ரெயில் பாதையை, அகலரெயில் பாதை யாக மாற்றும் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது.

 அந்த பணிகள் முடிந்து தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் பொள்ளாச்சி ரெயில் நிலையம் அதன் முக்கியத்துவத்தை இழந்து நிற்கிறது. 

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது

மருத்துவ உதவி பெட்டி

மதுரை கோட்ட கட்டுப்பாட்டில் இருந்த போது பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பராமரிப்பு பணிமனை இருந்தது. 

இங்கு 19 பெட்டிகள் கொண்ட 5 ரெயில்களை ஒரே நேரத்தில் நிறுத்தி கொள்ளும் அளவிற்கு வசதிகள் இருந்தது. விபத்துக்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளிக்க மருத்துவ உதவி பெட்டியும் இருந்தது.  

ரெயில்களுக்கு தண்ணீர் நிரப்பும் வசதியும் பொள்ளாச்சியில் இருந்தது. ஆனால் தற்போது குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது.

மேலும் ரெயில்கள் பழுதானால் பயணிகள் செல்வதற்கு சிறப்பு ரெயிலும் பொள்ளாச்சியில் நிறுத்தப்பட்டு இருக்கும். 40 டன் எடை தூக்கும் திறன் கொண்ட கஜராஜா கிரேன் பொள்ளாச்சியில் தான் இருந்தது. 

பயணிகளுக்கு 12 தங்கும் அறைகள், ரெயில் டிரைவர்கள் ஓய்வெடுக்க சமையல் கூட வசதியுடன் ஓய்வறைகள் இருந்தன. 

மதுரைக்கு அடுத்தபடியாக கூடுதல் மருத்துவ அலுவலர் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். இதுபோன்ற பல்வேறு முக்கியத்துவத்தை பொள்ளாச்சி ரெயில் நிலையம் பெற்று இருந்தது.

மதுரையுடன் இணைக்க வேண்டும்

பாலக்காடு ரெயில் கோட்டத்துடன் இணைக்கப்பட்ட பிறகு பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் காணாமல் போய்விட்டது. 

இங்கிருந்த ரெயில் பராமரிப்பு பணிமனை பாலக்காடுக்கு சென்று விட்டது. பொள்ளாச்சியில் இருந்த சீனியர் பிரிவு முதுநிலை பொறியாளர் அலுவலகம் கேரளா மாநிலம் கொல்லங்கோட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 

அகலரெயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு பொள்ளாச்சி வழியாக கோவை- மதுரை, பாலக்காடு-திருச்செந்தூர் மற்றும் பொள்ளாச்சி- கோவை ரெயில்கள் இயக்கப்பட்டன. 

ஆனால் கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட ரெயில்களை இயக்க பாலக்காடு கோட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

பொள்ளாச்சி மீண்டும் முக்கியத்துவம் வாய்ந்த ரெயில் நிலையமாக மாற வேண்டும் என்றால் பாலக்காட்டில் இருந்து பிரித்து சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்