பொள்ளாச்சி
ஆழியாற்றில் திதி கொடுத்த போது தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தேனீக்கள் கொட்டின
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த குரும்பபாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ரமேஷ்குமார் (வயது 30). தொழிலாளி. இந்த நிலையில் முருகனின் தாய் மயிலாத்தாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
எனவே 16-வது நாள் திதி கொடுப்பதற்கு முருகன், அவரது மகன் ரமேஷ்குமார் மற்றும் உறவினர்கள் அம்பராம்பாளையம் ஆழியாற்றுக்கு சென்றனர். மேலும் அங்கு உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் இருந்து சிலர் உறவினர்க ளுடன் வந்து திதி கொடுத்தனர்.
அப்போது திடீரென்று மலை தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் சிலர் தப்பி ஓடத்தொடங்கினர். ஆனாலும் தேனீக்கள் சுற்றிச்சுற்றி பறந்து வந்து திதி கொடுத்து கொண்டிருந்தவர்களை கொட்டியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர்கள் கூச்சல் போட்டனர்.
போலீசார் விசாரணை
இது குறித்த தகவலின் பேரில் பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள், தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் தேனீக்கள் கொட்டியதில் ரமேஷ்குமார் மயக்கம் அடைந்தார். அவரை தீயணைப்பு துறையினர் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
ஆனாலும் ரமேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். எனவே அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
20 பேர் படுகாயம்
தேனீக்கள் கொட்டியதில் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை சேர்ந்த ஜோதிமணி (50), வேல்முருகன் (21), சுனிதா (40), ஜெயபால் (55), மணியன் (50), சந்தியா (16), வேல்முருகன் (50), பாலகிருஷ்ணன் (50), சவுடேஸ்வரி (39), வரலட்சுமி (40), ராஜராஜேஸ்வரி (14), இந்துமதி (20), சுவாதி (16), ஜனார்த்தனன் (14), தனுசுயா (15), அய்யப்பன் (40), கிருஷ் ணன் (43), வெள்ளிங்கிரி (75), மணிவண்ணன் (30), மோகன பிரசாத் (11) ஆகிய 20 பேர் படுகாயமடைந்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் திதி கொடுக்கும் போது யாகம் செய்வதற்கு தீமுட்டியதாக தெரிகிறது. அப்போது வெளியேறிய புகையின் காரணமாக தேன் கூடு கலைந்து தேனீக்கள் பறந்து வந்து கொட்டியது தெரியவந்தது.
ஆனாலும் தேனீக்கள் கொட்டியதில் தான் ரமேஷ்குமார் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.