கொடைக்கானலில் கனமழை பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு பொதுமக்கள் கயிறு கட்டி மீட்பு

கொடைக்கானலில் பெய்த கனமழையால் பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.

Update: 2021-08-27 15:21 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன்காரணமாக கொடைக்கானல் அடுத்த வில்பட்டி ஊராட்சி பேத்துப்பாறையில் உள்ள பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கரை திரும்ப முடியாமல் தவித்தனர். இதையடுத்து அவர்கள் ஆற்றை கடப்பதற்காக இரு முனையிலும் கயிறு கட்டி மீட்கப்பட்டனர். 
இதைத்தொடர்ந்து ஆர்.டி.ஓ. முருகேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் மற்றும் தீயணைப்புத்துறையினர், வனத்துறையினர் நேற்று அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது தங்களுக்கு பெரியாற்றில் நிரந்தரமாக பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். 
இதுகுறித்து ஆர்.டி.ஓ.முருகேசன் கூறுகையில், ஆற்றை கடப்பதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருவதன் காரணமாக அப்பகுதியில் நிரந்தரமாக பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அத்துடன் அவர் அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் செய்திகள்