திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல் :
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திண்டுக்கல் ஒன்றிய தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு, மானிய விலையில் பெட்ரோல் உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதுபோல திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகம் முன்பு நகர தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி
பழனி பஸ்நிலைய ரவுண்டானாவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதேபோல் ஆயக்குடி, பாலசமுத்திரம் ஆகிய ஊர்களிலும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சத்திரப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கிட்டுசாமி முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கள்ளிமந்ைதயம், அம்பிளிக்கை ஆகிய பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொடைரோடு-வடமதுரை
கொடைரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
வடமதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். அய்யலூரில் ஒன்றிய பொருளாளர் சரவணன் தலைமையிலும், வளவிசெட்டிபட்டியில் ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமையிலும், புத்தூரில் ஒன்றியக்குழு உறுப்பினர் மாலதி தலைமையிலும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.