சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் அட்டை தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ

சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ள அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2021-08-26 23:18 GMT
சேலம்:
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் உள்ள அட்டை தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அட்டை தொழிற்சாலை
சேலம் அருகே சன்னியாசிகுண்டு பகுதியில் ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய அட்டை தொழிற்சாலை உள்ளது. இங்கு பழைய பேப்பர் மற்றும் அட்டைகளை சேகரித்து அதை கூழாக்கி புதிய அட்டைகளாக தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல் இரவு நேர ஷிப்ட் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அட்டை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பழைய அட்டைகள் கட்டுக்கட்டாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன. அந்த அட்டை கட்டுகள் அனைத்தும் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
பயங்கர தீ
இதனிடையே, நேற்று இரவு 10.30 மணியளவில் பழைய அட்டைகளில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்து இரவு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இது குறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
ஆனால் 200-க்கும் மேற்பட்ட அட்டை கட்டுகளில் தீப்பிடித்து எரிந்ததால் பயங்கரமாக பரவிய தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. மேலும் கடும் புகை மண்டலமாக அந்த இடம் காட்சி அளித்தது.
கூடுதல் வாகனம்
இதைத்தொடர்ந்து சூரமங்கலத்தில் இருந்து கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. பின்னர் 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே வாகனங்களில் தண்ணீர் தீர்ந்து போனதால், அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.
காரணம் என்ன?
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் கிச்சிப்பாளையம் போலீசாரும் அங்கு வந்து விசாரித்தனர். ஆனால் நள்ளிரவு 2 மணி வரையும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். இருப்பினும் அட்டைகள் எரிந்து சாம்பலானது. பழைய அட்டைகள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் எப்படி தீப்பிடித்தது என்ற விவரம் தெரியவில்லை. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலத்தில் இரவில் அட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்