ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகிய 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம்:
ரூ.500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகிய 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ரூ.500 லஞ்சம்
ஆத்தூர் அருகே ஜோதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய தந்தை சின்னண்ணன். இவரை சாராயம் கடத்திய வழக்கில் ஆத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இதனை தொடர்ந்து அவரை ஜாமீனில் எடுப்பதற்காக நன்னடத்தை சான்றிதழ் கேட்டு அவரது மகன் ராஜூ கடந்த 2005-ம் ஆண்டு கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராம நிர்வாக அலுவலர் அங்கமுத்து (57) என்பவரை அணுகியுள்ளார். அப்போது, அவர் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
ஆனால் அவ்வளவு தொகை கொடுக்க முன்வராத ராஜூ ரூ.500 மட்டும் கொடுக்க சம்மதித்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் அங்கமுத்து, கிராம உதவியாளர் துரைராஜ் (46) ஆகிய இருவரும் ராஜூவிடம் ரூ.500 லஞ்சம் வாங்கும்போது, அங்கு மறைந்திருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு தடுப்புபிரிவு போலீசார் பிடித்தனர். பின்னர் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், நன்னடத்தை சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் அங்கமுத்து, கிராம உதவியாளர் துரைராஜ் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி (பொறுப்பு) கிறிஸ்டல் பபிதா தீர்ப்பு கூறினார்.