அரசுக்கு எதிராக கோஷமிட்ட வழக்கு: மாவோயிஸ்டு ஆதரவாளர் கைது

அரசுக்கு எதிராக கோஷமிட்ட வழக்கில் மாவோயிஸ்டு ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-26 23:18 GMT
ஓமலூர்:
அரசுக்கு எதிராக கோஷமிட்ட வழக்கில் மாவோயிஸ்டு ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மாவோயிஸ்டு உடல் அடக்கம்
கேரள மாநிலம் அட்டபாடியில் கடந்த 2019-ம் ஆண்டு மாவோயிஸ்டு இயக்க தலைவன் மணிவாசகம் கேரள போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். தொடர்ந்து அவரது உடல், 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி சொந்த ஊரான சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி ராமமூர்த்தி நகரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ராமமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த மணிவாசகத்தின் மனைவி கலா (வயது 54), மணிவாசகத்தின் சகோதரி சந்திரா (42), மதுரை மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த விவேக் என்கிற விவேகானந்தன் (54), ராமமூர்த்தி நகரை சேர்ந்த லட்சுமி (45), லட்சுமியின் கணவர் சாலிவாகனன் (50), வாழப்பாடி மின்னாம்பள்ளியை சேர்ந்த செல்வராஜ், ஓமலூர் ஆணைகவுண்டம்பட்டியை சேர்ந்த பாலன், சேலம் செல்வநகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன், வெள்ளாளப்பட்டியை சேர்ந்த சித்தானந்தம், வில் கிருஷ்ணன், வேடியப்பன் உள்பட 13 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். 
ஆதரவாளர் கைது
இதனிடையே கடந்த பிப்ரவரி மாதம் தீவட்டிப்பட்டி போலீசார் நாய்க்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (75) என்பவரை கைது செய்தனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த மாவோயிஸ்டு ஆதரவாளர் இளங்கோ என்கிற சந்திரசேகர் (60) மதுரை நாகமலை அருகே தங்கியிருப்பதாக ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதாவுக்கு தகவல் கிடைத்தது. 
அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா தலைமையிலான போலீசார் அங்கு சென்று இளங்கோவை நேற்று கைது செய்தனர். இதனையடுத்து அவரை தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்