நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதி மேய்ச்சல் நிலமாக மாறியது- விவசாய பணிகளும் தொடக்கம்

நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது. மேலும் விவசாய பணிகளையும் விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

Update: 2021-08-26 23:18 GMT
கொளத்தூர்:
நீர்மட்டம் தொடர்ந்து குறைவதால் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி உள்ளது. மேலும் விவசாய பணிகளையும் விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
நீர்மட்டம் குறைந்தது
மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனிடையே காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததாலும், தண்ணீர் அதிகமாக வெளியேற்றுவதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்துவருகிறது. 
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. நீர்த்தேக்க பகுதிகள் பச்சை பசேல் என காணப்படுவதால், ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களாக மாறி உள்ளன. குறிப்பாக மூலக்காடு பெருமாள்கோவில் நத்தம் பகுதி பசுமையாக காணப்படுகிறது. இதன் காரணமாக கரையோரம் உள்ள கிராம மக்கள் தங்களது கால்நடைகளை இங்கு மேய்ச்சலுக்கு விட்டு வருகிறார்கள். 
விவசாய பணிகள்
மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம் நீர்த்தேக்கப்பகுதிகளான பண்ணவாடி, சேத்துக்குளி, மூலக்காடு, கோட்டையூர் போன்ற இடங்களில் முழுவடை விவசாய பணிகள் தொடங்கப்படுவது வழக்கம்.
அணையின் நீர்மட்டம் 65.99 அடியாக குறைந்துள்ளதால் அந்த பகுதியில் தற்போது முழுவடை விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக நீர்த்தேக்க பகுதியில் உள்ள விளைநிலங்கள் டிராக்டர்கள் மூலம் உழவு செய்யப்பட்டு கம்பு, சோளம் போன்ற தானிய பயிர்களை விளைவிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்