சேலம் கொண்டலாம்பட்டி அருகே பணியில் இருந்த போலீஸ் ஏட்டுவை தாக்கிய ‘நிர்வாண’ தொழிலாளியால் பரபரப்பு-சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

சேலம் கொண்டலாம்பட்டி அருகே பணியில் இருந்த போலீஸ் ஏட்டுவை நிர்வாணமாக இருந்த தொழிலாளி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.

Update: 2021-08-26 23:18 GMT
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே பணியில் இருந்த போலீஸ் ஏட்டுவை  நிர்வாணமாக இருந்த தொழிலாளி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.
போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காகாபாளையம் பிரிவு ரோட்டில் நேற்று முன்தினம் கொண்டலாம்பட்டி போலீசார் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மொபட்டில் வந்த முதியவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். இதில் அவர் பெரியசீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் என்பதும், 60 வயதுடைய அவர் ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் மது குடித்திருந்ததாக கூறப்படுகிறது. விசாரணையின் போது அந்த தொழிலாளி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் திடீரென தான் அணிந்திருந்த உடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக அங்கும், இங்கும் ஓடினார். மேலும் அவர் தகாத வார்த்தையால் பேசியதுடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஏட்டு ஒருவரை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சமூக வலைத்தளங்களில் பரவியது
அந்த தொழிலாளி, நிர்வாணமாக இருந்ததால் அங்கிருந்தவர்களுக்கு இந்த செயல் முகம் சுளிக்க வைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 
அதைத்தொடர்ந்து அவர் மீது பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் திடீரென அந்த நபர் விடுவிக்கப்பட்டார். பொதுமக்கள் மத்தியில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய அவர் ஏன் விடுவிக்கப்பட்டார்? என்பது முழுமையாக தெரியவில்லை.
இந்த நிலையில் நிர்வாண நபர் போலீஸ் ஏட்டுவை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ஏட்டுவின் மனக்குமுறல்
இதனிடையே தாக்கப்பட்ட போலீஸ் ஏட்டுவின் மனக்குமுறல் வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் பேசும் போது, பொதுமக்கள் முன்னிலையில் போலீஸ்காரரை ஒருவர் அடிக்கிறார். அவர் மீது வழக்குப்பதிந்து கொரோனா பரிசோதனை செய்து சிறையில் அடைக்காமல் விட்டுவிட்டனர்.
இது எனக்கு மட்டும் அவமானம் இல்லை, அனைத்து போலீசாருக்கும் பொருந்தும். சாப்பாட்டில் உப்பு போடாமல் சாப்பிட்டுவிட்டு பணியில் ஈடுபட வேண்டும் என்பதை போலீஸ் அதிகாரிகள் சொல்லாமல்சொல்லி உள்ளனர். ஆகையால் நான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிட மாட்டேன் என்று கூறி உள்ளார். 
இந்த வீடியோ போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்