கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது
நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியது.
டவுன் ரெயில் நிலையம்
நாகர்கோவில் பள்ளிவிளையில் உள்ள டவுன் ரெயில் நிலையத்தில் திருச்சி இன்டர்சிட்டி ரெயில், நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரெயில்கள் நின்று செல்வது வழக்கம். இந்த ரெயில்கள் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு செல்வது இல்லை. இதுபோக கோட்டார் ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகள் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் டவுன் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
ஆனால் டவுன் ரெயில் நிலையத்தை பொறுத்த வரையில் பயணிகளின் அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லாமல் இருந்தது. மேலும் பிளாட்பாரமும் சரிவர இல்லாமல் இருந்ததால் ரெயிலில் ஏறவும், இறங்கவும் பயணிகள் சிரமப்பட்டு வந்தனர். எனவே டவுன் ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்து, கூடுதல் பிளாட்பாரம் அமைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
விரிவாக்கம் செய்யும் பணி
குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரெயில் பாதை திட்ட பணிகளுடன் டவுன் ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணியும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதன்படி அங்கு கூடுதல் பிளாட்பாரம், ஒரு நடை மேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு செல்ல உயர்மட்ட மேம்பாலம், மின்விளக்கு வசதிகள், நிழற்குடைகள், இருக்கைகள் மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது ரெயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. அதில் மின் விளக்குகள், உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்கும் பணி நேற்று மும்முரமாக நடந்தது. இதில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டனர். கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரெயில் இயக்கப்படாமல் உள்ளது. எனவே பயணிகள் ரெயில் சேவை தொடங்குவதற்கு முன்னதாக பணிகளை நிறைவு செய்யும் வகையில் வேலைகள் வேகமாக நடக்கின்றன.
முன்பதிவு வசதி
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் இன்டர்சிட்டி ரெயில் குழித்துறை, நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்துக்கு அடுத்தபடியாக வள்ளியூரில் தான் நிற்கும். இதனால் இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக டவுன் ரெயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் தற்போது டவுன் ரெயில் நிலையத்தில் நடப்பு முன்பதிவு வசதி ஏற்படுத்தபட்டு உள்ளது. அதாவது இனிமேல் ரெயில் வருவதற்கு ½ மணி நேரத்துக்கு முன்பு வரை பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம். முன்பதிவு செய்ய தெரியாத பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த சேவை தொடங்கப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.