வாலிபரின் மோட்டார் சைக்கிளை கிணற்றில் வீசிய 3 பேர் கைது
சங்கரன்கோவிலில் வாலிபரின் மோட்டார் சைக்கிளை கிணற்றில் வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் ஷேக் சர்புதீன் (வயது 25), பாரதியார் 3-ம் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (21), சதீஷ்குமார் (27), கோமதியாபுரம் புது 2-ம் தெருவைச் சேர்ந்த அய்யப்பன் (20). இவர்கள் 4 பேரும் நண்பர்கள் ஆவர். இதில் ஷேக் சர்புதீனுக்கும், மற்றவர்களுக்கும் தகராறு காரணமாக முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷேக் சர்புதீன் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கார்த்திகேயன், சதீஷ்குமார், அய்யப்பன் உள்பட 5 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை தூக்கிச் சென்று அடித்து நொறுக்கி கிணற்றில் வீசியது ெதரியவந்தது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் கிணற்றில் இறங்கி மோட்டார் சைக்கிளை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன், சதீஷ்குமார், அய்யப்பன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.