தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நாகர்கோவிலில் கடைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-08-26 22:02 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் கடைகளில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகாரிகள் சோதனை
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்ய கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் நகர் நல அதிகாரி விஜய சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மாதேவன் பிள்ளை, பகவதி பெருமாள், ராஜா, ராஜேஷ், சத்யராஜ் ஆகியோர் கோட்டார் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள்,  பிளாஸ்டிக் பேப்பர்கள் போன்ற பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
500 கிலோ பறிமுதல்
தொடர்ந்து கடை மற்றும் கடைக்கு சொந்தமான குடோன் ஆகிய இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போல மேலும் 3 கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த 3 கடைகளுக்கு சேர்த்து மொத்தம் ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வகையில் 4 கடைகளிலும் இருந்து சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்