கடையம் அருகே வயல்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
கடையம் அருகே வயல்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெத்தான்பிள்ளை குடியிருப்பு, பங்களா குடியிருப்பு, சிவசைலம் ஆகிய கிராமங்கள் உள்ளன. மலையடிவாரத்தில் இந்த கிராமங்கள் அமைந்து உள்ளதால் அடிக்கடி வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றி, கரடி, மிளா, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் ஊருக்குள் வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை பங்களா குடியிருப்பு பகுதியில் உள்ள விளைநிலங்களில் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை கூட்டம் புகுந்தது. அந்த யானைகள் தோட்டம் மற்றும் நெல் வயல்களில் இறங்கி பயிர்களை நாசப்படுத்தின. இதில் சிலருக்கு சொந்தமான வயல்களில் நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி உள்ளன. யானைகள் அட்டகாசத்தால் சுமார் 5 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மேலும் மலையடிவாரத்திலுள்ள தனியார் தோட்டத்தில் மா மரங்களை முறித்தும் யானைகள் அட்டகாசம் செய்துள்ளன. இந்த ஆண்டு கார் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி பயிர் செய்துள்ள விளைநிலங்களுக்குள் விலங்குகள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன. எனவே விலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தது பற்றி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பயிர்கள் சேதப்படுத்தப்பட்ட வயல்களில் வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன் ராணி, துணை வேளாண்மை அலுவலர் சண்முகசுந்தரம், உதவி அலுவலர் கமல்ராஜ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.