ஈரோடு சூரம்பட்டி பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-26 21:47 GMT
ஈரோடு
ஈரோடு சூரம்பட்டி பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செல்போன் கோபுரம்
ஈரோடு சூரம்பட்டி ஸ்ரீ கார்டன் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்கனவே தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் இங்கு அந்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சார்பில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மனுவும் கொடுத்தனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் நேற்று காலை ஸ்ரீ கார்டன் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பில் ஊழியர்கள் வந்திருந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும், சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கதிர்வீச்சு
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதியில் ஏற்கனவே செல்போன் கோபுரம் உள்ள நிலையில், அதன் அருகில் 100 மீட்டர் தொலைவில், புதிதாக செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியேறும் அதிகப்படியான கதிர்வீச்சுகள் மூலமாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே இங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்’ என்றனர்.
அதற்கு போலீசார், ‘இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்