கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான நுழைவு தேர்வு நாளை தொடங்குகிறது
கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
பெங்களூரு: கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
சி.இ.டி. நுழைவு தேர்வு
கர்நாடக உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வில் 2 லட்சத்து ஆயிரத்து 816 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்காக மாநிலம் முழுவதும் 530 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1,060 சிறப்பு பறக்கும் படைகள், 530 தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், 530 மேற்பார்யைாளர்கள், 8,409 சிறப்பு மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 20 ஆயிரத்து 415 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 28-ந் தேதி உயிரியல் மற்றும் கணித தேர்வும், 29-ந் தேதி இயற்பியல், வேதியியல் தேர்வும் நடக்கிறது.
கொரோனா விதிகள்
வெளிமாநில மற்றும் எல்லை பகுதியில் உள்ள மாணவர்களுக்காக 30-ந் தேதி கன்னட மொழி தேர்வு நடைபெறும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கைகடிகாரம் பயன்படுத்த அனுமதி இல்லை. செல்போன், கையடக்க கணினி, கால்குலேடர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.