கம்ப்யூட்டர் என்ஜினீயர் பாலிதீன் பையால் முகத்தை சுற்றி தற்கொலை
பெங்களூரு அருகே தங்கும் விடுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். முகத்தில் பாலிதீன் பையால் சுற்றி கொண்டு அவர் உயிரை மாய்த்தது தெரியவந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு அருகே தங்கும் விடுதியில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார். முகத்தில் பாலிதீன் பையால் சுற்றி கொண்டு அவர் உயிரை மாய்த்தது தெரியவந்துள்ளது.
கம்ப்யூட்டர் என்ஜினீயர் மாயம்
பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே தேவரபீசனஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் பிரதீப்சிங் செகாவாத் (வயது 39), கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பிரதீப்சிங்கின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆகும். அவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரதீப்சிங் திடீரென்று காணாமல் போய் விட்டார்.
இதுபற்றி மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்தில் பிரதீப்சிங்கை காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதற்கிடையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுனில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து பிரதீப்சிங் தங்கி இருந்தார்.
விடுதியில் தற்கொலை
நேற்று முன்தினம் காலை நீண்ட நேரமாகியும் பிரதீப்சிங் தங்கி இருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி நெலமங்களா டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து உள்ளே சென்ற போது பிரதீப்சிங் பிணமாக கிடந்தார். அவரது முகத்தை சுற்றி பாலிதீன் பையால் சுற்றப்பட்டு இருந்தது. முதற்கட்ட விசாரணையில் பிளாஸ்டிக் கவரை முகத்தில் சுற்றி கட்டிக் கொண்டு அவர் தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.
ஆனால் பிரதீப்சிங் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. அவர் தற்கொலை கடிதம் எதுவும்எழுதி வைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெலமங்களா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.