பூட்டிய வீட்டில் ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை
வள்ளியூரில் பூட்டிய வீட்டில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்தவர் சாந்தகுரூஸ் நெப்போலியன் (வயது 41). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி ஆன்றோ அருள்லூசியா (35). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் வள்ளியூர் லூத்தர் நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடம் வாங்கி வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
சாந்தகுரூஸ் நெப்போலியன் வெளிநாட்டில் இருப்பதால் அவரது மனைவி ஆன்றோ அருள்லூசியா வள்ளியூர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆன்றோ அருள்லூசியா திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலைக்கு கோவில் திருவிழாவுக்கு சென்றார்.
நேற்று காலையில் அவருடைய வீடு திறந்து கிடந்தது. இதை பால்காரர் வெளியே நின்று பார்த்துள்ளார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஆன்றோ அருள்லூசியாவுக்கு அவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஆன்றோ அருள்லூசியா ஊருக்கு திரும்பி வந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆன்றோ அருள்லூசியா வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஆன்றோ அருள்லூசியா வீட்டில் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், லேப்-டாப், 2 செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளைபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கொள்ளை தொடர்பாக துப்பு துலக்குவதற்காக மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.