நெல்லை சித்த மருத்துவக்கல்லூரி மாணவிகள் 7 பேருக்கு கொரோனா

நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் நேரடி வகுப்புகள் தொடங்கிய நிலையில், 7 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

Update: 2021-08-26 21:31 GMT
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் அரசு சித்த மருத்துவக்கல்லூரி (சித்தா) அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த 16-ந்தேதி கல்லூரி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. இங்குள்ள மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியிலும் தங்கி இருந்து படித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவிக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தது. இதையடுத்து அந்த மாணவிக்கும், அவருடன் இருந்த மேலும் 2 மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 3 பேரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். பின்னர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

இந்த நிலையில் சுகாதாரத்துறை உத்தரவுப்படி 100 மாணவிகளுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கும், 2-ம் ஆண்டு மாணவிகள் 3 பேருக்கும் தொற்று உறுதி ஆனது. அவர்கள் உடனடியாக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து நேற்று மீதம் இருந்த மேலும் 200 மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. பரிசோதனை முடிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரியவரும் என கூறப்படுகிறது. கல்லூரி தொடர்ந்து இயங்கி வருகிறது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறுகையில், ‘‘கல்லூரியில் ஏற்கனவே ஆன்-லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்முறை பயிற்சிக்காக மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு இல்லாத மற்ற மாணவிகள் தனிமைபடுத்தப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்’’ என்றனர்.

மேலும் செய்திகள்