தாளவாடியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும்; அமைச்சர் பொன்முடி அறிவிப்புக்கு, மலைக்கிராம மக்கள் நன்றி

தாளவாடியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும் என்ற அமைச்சர் பொன்முடி அறிவிப்புக்கு அந்த பகுதியை சேர்ந்த மலைக்கிராம மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-08-26 20:56 GMT
தாளவாடி
தாளவாடியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும் என்ற அமைச்சர் பொன்முடி அறிவிப்புக்கு அந்த பகுதியை சேர்ந்த மலைக்கிராம மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். 
கோரிக்கை
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 10 ஊராட்சிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். 
இங்கு அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிக்கூடங்கள் மட்டுமே உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி (கல்லூரி) படிப்புக்காக அதிக தொலைவில் உள்ள சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, கோபி ஆகிய பகுதிக்கு தான் செல்ல வேண்டும். இதன்காரணமாக இங்குள்ள மாணவர்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. குடும்ப வருவாய் காரணமாக மாணவர்கள் பலர் பள்ளிப்படிப்புடன் நின்றுவிட்டு கிடைக்கிற வேலைக்கு சென்றுவிடுகின்றனர். இதை கருத்தில் கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 
அரசு கல்லூரி
மேலும் தங்கள் பகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீலகிரி ஆ.ராசா எம்.பி., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோரிடம் தாளவாடி பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். 
இந்த நிலையில் தாளவாடியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அறிவித்தார். 
தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் இதற்கு உறுதுணையாக செயல்பட்ட ஆ.ராசா எம்.பி., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம், மாநில விவசாய அணி தலைவர் என்.கே.கே.பெரியசாமி, ஒன்றிய செயலாளர் சிவண்ணா ஆகியோருக்கு தாளவாடி மலைப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். 

மேலும் செய்திகள்