குமரிக்கு 20 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது
குமரி மாவட்டத்துக்கு 20 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்துக்கு 20 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன.
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அண்டை மாவட்டமான நெல்லையில் இருந்தும், மதுரையில் இருந்தும் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 1,900 கோவேக்சின் தடுப்பூசிகளும், 17 ஆயிரத்து 100 கோவிஷீல்டு தடுப்பூசிகளும் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்டன.
இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நேற்று 63 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தன. முகாம்களில் பொதுமக்கள் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. நாகர்கோவில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த தடுப்பூசி முகாமில் காலை 10 மணி அளவில் பொதுமக்கள் கூட்டம் ஓரளவுக்கு காணப்பட்டது. அப்போது பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
20 ஆயிரம் தடுப்பூசிகள்
இந்த நிலையில் குமரி மாவட்டத்துக்கு மேலும் 20 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் நேற்று மாலை வந் தன. அவற்றை குமரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மதுரைக்கு சென்று வாங்கி வந்தனர். இந்த தடுப்பூசிகள் தற்போது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு உள்ளன.