ரூ.15 லட்சம் கஞ்சா பறிமுதல்

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கஞ்சா பதுக்கி வைத்திருந்த தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-26 20:01 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா சந்தமநாயக்கன்பட்டி பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசனுக்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள வீடுகளில் திடீர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். 

அதன்பேரில் ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம் மேற்பார்வையில் செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சந்தமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் வீட்டில் ஒரு அறையில் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 60 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த செந்திலின் மனைவி ரேவதி (வயது 37), அவருடைய மகன் வைரபாண்டி (19) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்