ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறப்பு
ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா திறக்கப்பட்டது
திருச்சி
திருச்சி ஸ்ரீரங்கம்-மேலூர் சாலையில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்காவாக திகழ்ந்து வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட தாவரங்கள், 100-க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி வகைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சிகள் பெருக ஏதுவாக சிறு குளங்கள், நீர்வீழ்ச்சிகள், சிறு ஓடைகள், வண்ணத்துப்பூச்சி குடில், குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆராய்ச்சி மாணவர்களும் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக சுற்றுலாத் தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்டவை மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து சுற்றுலாத் தலங்களை திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி முக்கொம்பு சுற்றுலா மையம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 4 மாதங்களுக்கு பிறகு ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா நேற்று காலை 9 மணிக்கு திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு பூங்கா திறக்கப்பட்டதால் ஆர்வமுடன் வந்த பெண்கள் சிலர் பூங்காவை சுற்றிப்பார்த்தும், ஊஞ்சலில் அமர்ந்து விளையாடியும் மகிழ்ந்தனர். குழந்தைகளும் உற்சாகமாக விளையாடினார்கள்.