செல்போன் கடை உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

தரகம்பட்டியில் செல்போன் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-08-26 19:03 GMT
தரகம்பட்டி, 
செல்போன் கடை உரிமையாளர்
மயிலம்பட்டியை சேர்ந்தவர் சுலைமான். இவருடைய மகன் சேக் முகமது (வயது 28). இவர் தரகம்பட்டியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு  வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தரகம்பட்டி தனியார் பள்ளி அருகே சென்றபோது அடையாளம் தெரியாத 4 மர்ம ஆசாமிகள் சேக் முகமதுவை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் அவருடைய வலது கை துண்டானது.
தீவிர சிகிச்சை
இதையடுத்து, படுகாயமடைந்த சேக் முகமதுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து சேக் முகமதுவின் அக்காள் கணவரான சையத் அலி சிந்தாமணிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் சிந்தாமணிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமாதேவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். 
முன்விரோதம்?
முன்விரோதம் காரணமாக சேக் முகமதுவை மர்ம ஆசாமிகள் அரிவாளால் வெட்டினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்