வாடகை காரை கடத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

வாடகை காரை கடத்தி சென்றவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரமக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-08-26 18:26 GMT
பரமக்குடி,

வாடகை காரை கடத்தி சென்றவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பரமக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

வாடகை கார்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த முனியசாமி மகன் மாணிக்கநாதன் (வயது 31), அம்மன்பட்டி சேர்ந்த வெற்றிவேல் மகன் அஜித், கமுதி மரக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிவண்ணன் (25), பேரையூர் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் காளி (24) ஆகிய 4 பேரும் கடந்த 13.2.2019-ந் தேதி தென்காசியில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருவதற்காக வாடகைக்கு கார் எடுத்து வந்துள்ளனர். அந்த காரை தென்காசியை சேர்ந்த டிரைவர் சுப்பிரமணியன் மகன் ஜோதி (45) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
கார் வந்து கொண்டிருக்கும் வழியிலேயே மாணிக்கநாதன் அவரது உறவினரான மொச்சிக்குளத்தைச் சேர்ந்த லிங்கநாதன் மகன் முத்துமணி (19) என்பவருக்கு போன் செய்து காருக்கு கொடுக்கவேண்டிய வாடகை பணம் 3 ஆயிரத்தை எடுத்து கொண்டு சாயல்குடியில் வந்து நிற்குமாறு கூறியுள்ளார்.

டிரைவருக்கு அடி-உதை

இந்நிலையில் கார் ஊரை வந்தடைந்ததும் டிரைவரிடம் வாடகை பணத்தை கொடுக்காமல் டிரைவர் ஜோதியை பிடித்து காரிலிருந்து வெளியே இழுத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் அஜித், மணிவண்ணன் இருவரும் டிரைவரின் கையை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. மேலும் டிரைவர் ஜோதியிடம் இருந்த ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.4 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் ஆகியவற்றையும் பறித்து விட்டு  காரை கடத்திச் சென்று விட்டனர்.

7 ஆண்டு சிறை

இதுகுறித்து டிரைவர் ஜோதி கோவிலாங்குளம் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் மாணிக்க நாதன் என்பவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் உள்ளார். இது தொடர்பான வழக்கு பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனியரசு, மாணிக்கநாதனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். மேலும் மற்ற 4 பேருக்கான வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்