பள்ளிக்கு வரும் மாணவர்களை வாரம் ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும்
பள்ளிக்கு வரும் மாணவர்களை வாரம் ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி,
கொரோனா தொறறு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால்,முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை வருகிற 1-ந்தேதி முதல் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார் அப்போது அவர் பேசியதாவது:-
அனைத்து அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.பள்ளிகள் வருகிற 1-ந்தேதி முதல் 50 சதவீத மாணவர்களுடன் 9,10,11,12-ம் வகுப்புகள் திறக்கப்படவுள்ளன.
பரிசோதனை
எனவே கொரோனா தொற்று பரவாமல் இருக்க பள்ளிகளில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று அங்கு வரும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களை வாரம் ஒரு முறை பரிசோதனை செய்து காய்ச்சல், சளி தொந்தரவு உள்ளதா என கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அவர்களை பள்ளியில் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மாணவர்களை பரிசோதிப்பதற்கும், கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆலோசனை
இது தவிர மேலும் பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.