விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்து முன்னணியினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும்
வேலூர்
வேலூர் மாவட்ட இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ், பொருளாளர் பாஸ்கரன், மாநகர செயலாளர் ஆதிமோகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று மாவட்ட கலெக்டரின் குமாரவேல் பாண்டியனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
இந்து முன்னணி சார்பில் வருகிற 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தொடர்ந்து 12-ந் தேதி வேலூரில் சிலை ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டுகளை போன்று சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் அருகில் ஊர்வலம் தொடங்கி ஆற்காடு சாலை, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை முருகன் கோவில், சைதாப்பேட்டை மெயின் பஜார், அண்ணாகலையரங்கம், மாங்காய் மண்டி, கொணவட்டம் வழியாக சதுப்பேரி ஏரியில் சிலை கரைக்கப்பட உள்ளது. அதன்படி இந்த ஆண்டு சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யவும், சிலை ஊர்வலம் நடத்தவும், கடந்த ஆண்டுகளை போன்று வழக்கமாக செல்லும் பாதையிலேயே இந்த ஆண்டும் ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகே மதியம் 1 மணி அளவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கும், அங்கு மேடை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசுக்கு பரிந்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.